செங்கல்பட்டு நகராட்சியில் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்ட டிபிசி தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் நகரப் பகுதிகளில் நேற்று மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.
செங்கல்பட்டு நகராட்சி அலுவலகத்தில், கடந்த 2015-ம்ஆண்டு முதல் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும் டெங்குகொசு ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒப்பந்த முறையில் 70 பேர் பணி அமர்த்தப்பட்டனர். இவர்கள் நகராட்சி வரி வசூல் செய்வது, வாக்காளர் பெயரை சேர்ப்பது, டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மழைநீர் சேகரிப்புத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் நகராட்சி ஆணையரின் உத்தரவின்படி கரோனாபொது முடக்க காலத்தில் தொற்று அதிகரித்த பகுதிகளை அடையாளம் கண்டு அப்பகுதிகளை தனிமைப்படுத்துவது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆய்வுசெய்வது, தடுப்புகளை ஏற்படுத்துவது, தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உணவுப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை, குறைந்த ஊதியத்தில் செய்து வந்தனர்.
இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி டிபிசி பணியாளர்களை திடீரென பணிநீக்கம் செய்துள்ளது. கடந்த ஒரு மாதமாக பணியில்லாததால் இவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம், நகராட்சி ஆணையர் தலையிட்டு, பணிநீக்கம் செய்யப்பட்ட டிபிசி பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி, சிஐடியு சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வரும் 17-ம் தேதி ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், நகர மக்களுக்காக கடந்த 5 ஆண்டுகளாக சுகாதாரப் பணியில் ஈடுபட்டு வந்த டிபிசி தொழிலாளர்களுக்கு மீண்டும் நகராட்சி நிர்வாகம் பணி வழங்கவேண்டும் என வலியுறுத்தி, வணிகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் நகரப் பகுதி மக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி மக்களை சந்தித்து ஆதரவு திரட்டிவருகின்றனர். இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக வரும் 17-ம் தேதி ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago