காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் முற்றுகை, ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய 280 பேர் கைது

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் ரயில் மறியல், மத்திய அரசு அலுவலகம் முற்றுகை, ஆர்ப்பாட்டம், பிரச்சார இயக்கம் உள்ளிட்டவை நேற்று நடைபெற்றன.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தஞ்சாவூரில் உள்ள மத்திய அரசின் உற்பத்தி வரி (எக்சைஸ்) அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது.

அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால், தஞ்சாவூர்- மருத்துவக் கல்லூரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 150 பேரை போலீஸார் கைது செய்தனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பூதலூரில் திருச்சி- சென்னை சோழன் விரைவு ரயிலை மறித்து, தட்சிணாமூர்த்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினர் 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகரச் செயலாளர் இ.வசந்தி தலைமை வகித்தார்.

மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, தலைவர் ஆர்.கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும், அகில இந்திய விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில், நாளை (டிச.14) முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறவுள்ளதையொட்டி, தஞ்சாவூரில் பள்ளியக்ரஹாரம், கொடிமரத்து மூலை, மேலவீதி, ரயிலடி, பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி நேற்று பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில், தமிழர் தேசிய முன்னணியின் அயனாவரம் சி.முருகேசன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அஞ்சல் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், அமைப்பின் தலைமை ஆலோசகர் டாக்டர் பாரதி செல்வன், திருவாரூர் கலைச்செல்வன், மன்னை ஹரிஹரன், கோட்டூர் நிர்வாகி கோவலன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இதேபோல, திருத்துறைப்பூண்டி அஞ்சல் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழு நகரச் செயலாளர் ஜெயபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சியில்...

திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபடுவதற்காக, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மூ.த.கவித்துவன் தலைமையில், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ம.ப.சின்னதுரை, தமிழ்நாடு முற்போக்கு பெண்கள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் த.பானுமதி, தமிழ்த் தேசிய பேரியக்க மாநகரச் செயலாளர் இலக்குவன், மஜக மாவட்டத் தலைவர் மொய்தீன், தமிழ்ப் பேரரசு கட்சி மாவட்டச் செயலாளர் உசேன் உள்ளிட்டோர் நேற்று ஜங்ஷன் ரயில் நிலையத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, அதே இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்