ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்தச் சூழலில் நேற்று அவரது 71-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் கலீல் தலைமையில், இணைச் செயலாளர்கள் கர்ணன், எஸ்.டி.ராஜ் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சமயபுரம் பகுதியிலுள்ள நரிக்குறவர் காலனியில் வசிக்கும் மக்களுக்கு கொசுவலை, போர்வை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், ரத்ததான முகாம், சர்வமத பிரார்த்தனை ஆகியவை நடைபெற்றன. இதேபோல, ரஜினி மக்கள் மன்ற திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மாநகரச் செயலாளர் எஸ்.வி.ரவிசங்கர் தலைமையில் ரங்கம் ராகவேந்திரா கோயிலில் வெள்ளித் தேர் இழுத்து, வழிபாடு நடத்தப்பட்டது.

அரியலூர் ரயில் நிலையம் அருகிலுள்ள திரையரங்க வளாகத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை, மாவட்ட பொறுப்பாளர் நிஜாமுதீன் திறந்துவைத்தார். லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் உள்ள ஆதரவற்ற மாணவ, மாணவிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் ராஜேஸ்வரன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

ரஜினிகாந்தை திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குநர் பாலச்சந்தரின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள பாலச்சந்தரின் சிலைக்கு ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி மாவட்டச் செயலாளர் ஏ.தமிழ்ச்செல்வி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டச் செயலாளர் தாயுமானவன் தலைமையில் பல பகுதிகளில் ரஜினி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்