களியக்காவிளையில் உள்ள சோதனைச்சாவடிகளில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.84 ஆயிரம் பணம் சிக்கியது. மோட்டார் வாகன ஆய்வாளர், எஸ்.எஸ்.ஐ. உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கேரள எல்லையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளையில், தமிழக அரசின் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடி உள்ளது. இங்கு, தமிழகம் மற்றும் கேரளா இடையே பயணிக்கும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, ஆவணங்கள் பரிசோதிக்கப்படுகின்றன.
இதன் அருகே படந்தாலுமூட்டில் காவல்துறை சோதனைச்சாவடி உள்ளது. வெகுநாட்களாக செயல்படாமல் பூட்டியே கிடந்த இந்த சோதனைச்சாவடி, கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் அதிகமான வாகனங்கள் செல்வதால் சமீபத்தில் திறக்கப்பட்டது. 24 மணிநேரமும் போலீஸார் இங்கு பணிக்குநியமிக்கப்பட்டு வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் இவ்விரு சோதனைச்சாவடிகளிலும், பணத்தை வாங்கிக்கொண்டு, சட்டவிரோதமாக பொருட்களை கடத்தி செல்லும் வாகனங்களை அனுமதிப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தொடர் புகார்கள் வந்தன.
நாகர்கோவில் லஞ்ச ஒழிப்புடிஎஸ்பி மதியழகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார், நேற்று அதிகாலை 4 மணியளவில் இரு சோதனைச் சாவடிகளிலும் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனைமேற்கொண்டனர். இரண்டரை மணிநேரமாக நடந்த சோதனையில் கணக்கில் வராத பணம் அலுவலகத்தில் இருந்தது. இதற்கு, உரியபதிலளிக்க முடியாமல் அலுவலர்கள் திணறினர்.
வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியில் ரூ. 64,140 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. படந்தாலுமூடு காவல்துறை சோதனை சாவடியில் ரூ.20,740 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
படந்தாலுமூடு சோதனைச்சாவடியில் பணியில் இருந்த எஸ்எஸ்ஐ சுந்தர்ராஜன், காவலர்கள் காளிமுத்து, மோகன்தாஸ் ஆகியோர் மீதும், களியக்காவிளை வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியில் பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணதாஸ், ஊழியர் குமரேசன் ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தமிழக, கேரள எல்லையில் உள்ள இரு சோதனை சாவடிகளில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையும், பணம் பறிமுதல் செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரையில் போக்குவரத்துத் துறை சோதனைச்சாவடி உள்ளது. இந்த வழியாக தினமும் தமிழகம்- கேரளா இடையே ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சோதனைச் சாவடியில் வாகனங்களை சோதனையிடும் ஊழியர்கள், வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் நேற்று அதிகாலையில் சோதனை நடத்தினர். அப்போது, சோதனைச் சாவடி அலுவலகத்தில் 4 ஊழியர்கள் பணியில் இருந்தனர். அங்கு கணக்கில் வராத ரூ.48 ஆயிரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago