பெரம்பலூர் அருகே பட்டியலின சிறுவர்களை மனித கழிவை அள்ள வைத்ததாக 3 இளைஞர்கள் கைது

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சிறுகுடல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் 5 பேர் ஊருக்கு ஒதுக்குப்புறமான பொது இடத்தில் நேற்று காலை இயற்கை உபாதையை கழிக்கச் சென்றனர்.

அப்போது, அதே ஊரில் உள்ள மற்றொரு பிரிவைச் சேர்ந்த சிலர், அந்த சிறுவர்களிடம், பொது இடத்தில் அவர்கள் கழித்த மனித கழிவை அள்ளச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

பின்னர், மனித கழிவை அப் புறப்படுத்திவிட்டு வீட்டுக்கு வந்த சிறுவர்கள், இதுகுறித்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளனர்.

தகவலறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலாளர் வீர.செங்கோலன், மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் இரா.சீனிவாசராவ், மாவட்ட அமைப்பாளர் மு.பா.ஜெயக்குமார், மாவட்ட செய்தித் தொடர்பாளர்கள் இரா.ஸ்டாலின், மு.உதயகுமார் உள்ளிட்டோர் அங்கு சென்று, பட்டியலின சிறுவர்களை மனித கழிவுகளை அள்ள வைத்த நபர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அங்கு வந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் மருவத்தூர் போலீஸார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது.

இந்நிலையில், பட்டியலின சிறுவர்களை மனித கழிவுகளை அள்ளவைத்த அவினேஸ்(20), செல்வக்குமார்(19), சிலம்பரசன்(20) ஆகிய 3 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத் தின்கீழ் கைது செய்யப்பட்டுள் ளனர் என மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE