குடியிருப்புப் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு உட்பட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி 14-வதுவார்டுக்குஉட்பட்ட ரங்கநாதபுரத்தில், கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக பொதுக் குழாயில்ஆழ்குழாய் தண்ணீர் வரவில்லை. மின்மோட்டார் பழுதாகிய நிலையில், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும், குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் சரிவர இல்லை என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சியினரை கண்டித்து, பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட நேற்று திரண்டனர்.
சம்பவ இடத்துக்கு மாநகராட்சி உதவிப் பொறியாளர் சுரேஷ், சுகாதார கண்காணிப்பாளர் யுவராஜ், குழாய் ஆய்வாளர் சுகுமார் மற்றும் மாநகர போலீஸார் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறும்போது, "கழிவுநீர்கால்வாய்கள் தூர்வாரப்படாமல் மண் மூடி கிடப்பதால், மழைக்காலத்தில் வீடுகளுக்குள் சாக்கடை நீரும் புகுந்துவிடுகிறது. இதைத் தடுக்க கழிவுநீர் கால்வாயை தரமாக கட்ட வேண்டும். பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட தெருக்கள் மண் மேடுகளாக காணப்படுகின்றன. அவற்றை சீரமைத்து தார்சாலைகளாக அமைக்க வேண்டும். தொடக்கப் பள்ளி அருகே சாலையின் குறுக்கே தோண்டப்பட்டு, ஒரு மாதத்துக்கு மேலாகியும் கிடப்பில் உள்ள சிறுபாலத்தை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும். ஆழ்குழாய் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்" என்றனர்.
மேற்கண்ட பிரச்சினைகளுக்கு உரியநடவடிக்கை எடுப்பதாகஅதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago