திருப்பூர் அருகே இளம்பெண்ணின் முகத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட போவதாகக் கூறி, பணம் கேட்டு மிரட்டியவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் தங்கி, பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரது அலைபேசிக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், அப்பெண்ணின் முகத்தை மார்ஃபிங் செய்து ஆபாசமாக சமூக வலைதளங்களில் பதிவிடஉள்ளதாகவும், அப்படி வெளியிடாமல் இருக்க ரூ.20 ஆயிரம் தர வேண்டும் எனவும், காவல் துறைக்கு தெரியப்படுத்தினால் சமூக வலைதளங்களில் நிச்சயம் வெளியிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த அப்பெண் அளித்த புகாரின்பேரில், பெருமாநல்லூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், காவல் துறையினர் அறிவுரைப்படி மிரட்டல் விடுத்த நபருக்கு அலைபேசியில் அழைத்து பேசிய இளம்பெண், நீங்கள் இருக்கும் பகுதிக்கு பணம் கொண்டு வந்தால் மற்றவர்களுக்கு தெரிந்துவிடும் என்றும், எனவே, பெருமாநல்லூர் பகுதிக்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறும் நேற்று கூறியுள்ளார்.
இதை நம்பிய அந்த நபர், பெருமாநல்லூர் நான்கு வழி சாலை பகுதிக்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்வதாக கூறியுள்ளார். இதையடுத்து, பெருமாநல்லூர் நான்கு வழி சாலை சந்திப்பில் போலீஸார் மறைந்து நின்றனர். சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பணத்தை பெற முயன்ற இளைஞரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், கரூர் சின்ன தாராபுரம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் நாகராஜ் (21) என்பது தெரியவந்தது. பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவரை போலீஸார் கைது செய்தனர்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago