சிவகங்கை அருகே 400 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கி அழுகி வருகிறது. தேங்கியுள்ள தண்ணீரை 10 நாட்களாக வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
சிவகங்கை அருகே நாடமங்கலம் பெரிய கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் வேம்பங்குடி கிராமத்துக்குரிய விவசாய நிலங்கள் உள்ளன. இந்த ஆண்டு வேம்பங்குடி விவசாயிகள் 400 ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். நெற்கதிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில் உள்ளன. இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாடமங்கலம் கண்மாய் முழுமையாக நிரம்பியது. ஆனால் மறுகால் பாயவிடாமல் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் கண்மாய்க்கு வரும் தண்ணீர் அனைத்தும் அருகில் உள்ள நெல் வயலை மூழ்கடித்துள்ளன. வெள்ளநீர் சூழ்ந்ததால் நெற்பயிர்கள் அழுகி வருகின்றன. கடந்த 10 நாட்களாக வயலில் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வேம்பங்குடி விவசாயிகள் கூறியதாவது:
நாடமங்கலம் பெரிய கண்மாய் முழுமையாக நிரம்பிவிட்டது. கண் மாயின் மாறுகால் பாயும் கலுங்கு பகுதியை அடைத்து வைத்துள்ளனர். இதனால் கண்மாயில் இருந்து தண்ணீர் வெளியேறவில்லை.
கண்மாயில் இருந்து மாறுகால் பாய்ந்தால் மட்டுமே விவசாய நிலங்களில் தேங்கியிருக்கும் வெள்ளநீர் கண்மாய்க்குச் செல்லும். இதுகுறித்து 10 நாட்களாக தொடர்ந்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago