அனைத்து துறை ஆய்வுக்கூட்டத்தில்டெங்கு ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

By செய்திப்பிரிவு

அரசு அலுவலர்கள் தாங்கள் வசிக்கும் பகுதி மற்றும் அலுவலங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி அறிவுறுத்தினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துசெல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பரமசிவம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட டாஸ்க் போர்ஸ் கோவிட்-19 தடுப்பூசி தொடர்பாகவும், கொள்ளை நோய், ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் தர அளவு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான தரச்சான்று ஒருங்கிணைப்பு குறித்து ஆலோசனைகள் நடந்தன. கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:

மழைக்காலம் என்பதால் தற்போது வீடுகளைச் சுற்றி மழைநீர் தேங்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் கப், உபயோகமற்ற பொருட்கள் மற்றும் டயர்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

பொது சுகாதார துறை மற்றும் உள்ளாட்சித்துறை மூலமாக வீடு தேடி வரும் பணியாளர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். துறை அலுவலர்கள் ஒவ்வொரு வாரத்திலும் தான் வசிக்கும் இடங்கள் மற்றும் பணிபுரியும் அலுவலகம், சுற்றியுள்ள இடங்களை மழை நீர் தேங்கா வண்ணம் சுத்தம் செய்து, சுத்தமாக வைத்துக் கொண்டமைக்கு சான்றினை தொடர்புடைய அலுவலர்கள் கையொப்பத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.

இக்கூட்டத்தில் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு தொடர்பான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இதில், குடும்ப நலம் துணை இயக்குநர் ராஜலட்சுமி, காசநோய் ஒழிப்பு பிரிவு துணை இயக்குநர் கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்