ஆண்டுதோறும் டிச.3-ம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினமாக அனுசரிக்கின்றனர்.
இதையொட்டி, 94 பயனாளிக ளுக்கு தலா ரூ.70 ஆயிரம் மதிப்பில்ரூ.65 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் பேட்டரி சக்கர நாற்காலி, 3 பயனாளிகளுக்கு ரூ.10500 மதிப்பில் நவீன செயற்கை பாகங்கள் என 97 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
மேலும், தன்னார்வலர்கள் சார்பில் 18 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன அலைபேசியை ஆட்சியர் வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில், நிகழ்வுக்காக வந்த மாற்றுத்திறனாளிகள் பலர் போதிய கழிவறை வசதி இன்றி அவதிப்படும் சூழல் ஏற்பட்டது. மேலும், ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவுவாயில் பகுதியில் இருமருங்கிலும் உள்ள பிரத்யேக கழிவறை சுத்தம் செய்யப்படாமல் இருந்ததால் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "இங்குள்ள மாற்றுத் திறனாளிகளின் பிரத்யேக கழிவறை எப்போதும் சுத்தம் செய்யப்படாத நிலையிலேயே உள்ளது. இதனை முறையாக பராமரிக்க வேண்டும். வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாற்றுத் திறனாளிகள் பலர் மருத்துவச் சான்று கோரி ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகின்றனர். அப்போது, மேற்கண்ட கழிவறையை பயன்படுத்த சிரமம் ஏற்படுகிறது. எனவே, அத்தியாவசியத் தேவையான கழிவறையை சுத்தமாகவும், பழுதடைந்த கழிவறைகளை அப்புறப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் (பொ) ஜெயபிரகாஷ் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, "மாற்றுத் திறனாளிகளுக்கு தரைத் தளத்தில் இரண்டு கழிவறைகள் உள்ளன. மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி மற்றவர்களும் பயன் படுத்துவதால் சுகாதாரமின்றி இருக்கலாம்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago