ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மத்திய அரசின் அரசிதழில் நவ.19-ம் தேதி வெளியான அறிவிப்பில், அலோபதி மருத்துவர்கள் செய்து வரும் அறுவை சிகிச்சைகளை இனி ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்த தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் வரும் 11-ம் தேதி அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா மற்றும் அவசர சிகிச்சையைத் தவிர மற்ற அனைத்து சிகிச்சைகளையும் தவிர்க்க அரசு மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் மதுரை அரசு ராசாசி மருத்துவமனை டீன் அலுவலக நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு மருத்துவர்கள் சங்க மாவட்ட அவைத் தலைவர் மருத்துவர் பாப்பையா தலைமை வகித்தார். செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மருத்துவ மாணவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள், மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ராஜபாளையம் கிளைத் தலைவர் ஜவகர்லால் தலைமை வகித்தார். இதில் விருதுநகர் மாவட்டத் தலைவர் போஸ், மாவட்டச் செயலர் அறம், தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க விருதுநகர் மாவட்டத் தலைவர் சுகுமார், மாவட்டச் செயலர் ரூபன்ராஜ், சிவகாசி கிளைச் செயலர் சண்முகராஜன், ராஜபாளையம் மருத்துவர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் இந்திய மருத்துவக் கழகம், அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மானாமதுரை பழைய பஸ் நிலையம் அருகே இந்திய மருத்துவக் கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அதன் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முத்துராமலிங்கம், ஜெகன், முத்துப்பாண்டி, சிவராஜ், பாலாம்மாள் சுந்தர்ராஜன், ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மருத்துவர் சங்க ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் டி.அரவிந்தராஜ் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர்கள் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, கோபி, இணைச் செயலாளர் மலையரசு, நிதிச் செயலாளர் அக்னெலா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலீலுர் ரகுமான் உட்பட ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க மாநிலச் செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதில் 70-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.பழநி அரசு மருத்துவமனை முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மருத்துவர் சங்கப் பழநி கிளைத் தலைவர் குணசீலன் தலைமை வகித்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
தேனி
தேனி அரசு மருத்துவமனை முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மருத்துவர்கள் சங்க மாநிலப் பொருளாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். கம்பம் பள்ளத்தாக்குக் கிளைத் தலைவர் பாண்டியன், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் ராம்சுந்தர், செயலாளர் சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago