கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2021-22-ம் நிதியாண்டில், விவசாயத் துறைக்கு ரூ.4609.12 கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான வங்கியாளர்களின் ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை யில் நடந்தது. இதில், 2021-22 நிதியாண்டின் வளம் சார்ந்த வங்கிக் கடன் திட்ட அறிக்கையை ஆட்சியர் வெளியிட்டு கூறியதாவது:
நபார்டு தயாரித்த வளம் சார்ந்த வங்கிக் கடன் திட்ட அறிக்கையின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2021-22-ம் நிதியாண்டில் முன்னுரிமைத் துறையின் கீழ் ரூ.7,035 கோடி அளவுக்கு வங்கிகளால் கடன் அளிக்க முடியும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு 2020-21-ம் ஆண்டுக்கான திட்ட மதிப்பீட்டை விட 8 சதவீதம் அதிகம். அரசுத் துறைகள், வங்கிகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து, இத்திட்ட ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி ஒரு விவசாய மாவட்டமாக இருப்பதால், மொத்த மதிப்பீடான ரூ.7036 கோடி திட்டத்தில், விவசாயத் துறைக்கு ரூ.4609.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கடனுக்கு ரூ.1083.16 கோடியும், ஏற்றுமதிக்கு ரூ.96 கோடியும், கல்விக்கு ரூ.105.53 கோடியும், வீட்டு வசதிக்கு ரூ.132.75 கோடியும், சமூக உள்கட்டமைப்புக்கு ரூ.52.50 கோடியும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ரூ.18.39 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுய உதவிக்குழுக்கள், கூட்டு பொறுப்பு குழுக்கள் மற்றும் பிஎம்ஜேடிஒய் திட்டத்தின் கீழ் ஓவர் டிராப்டுக்கு ரூ.938.55 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வங்கிகள் அனைத்து துறைகளிலும் குறிப்பாக ஏழை எளியோருக்குத் தேவையான கடன்களை குறிப்பிட்ட நேரத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா உதவி மேலாளர் தாமோதரன், இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் வெங்கடசுப்பு, நபார்டு உதவி பொது மேலாளர் நஸ்ரின் சலீம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்ன பாலமுருகன், தாட்கோ மேலாளர் யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago