வாணியம்பாடி-திருப்பத்தூர் இடையி லான குண்டும், குழியுமான சாலையை சமூக ஆர்வலர்கள் தாமாக முன்வந்து சீரமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இதற்கு, பொதுமக்கள் தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி செட்டியப்பனூர் பகுதியில் இருந்து திருப்பத்தூர் வரை சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவுள்ள நெடுஞ்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. திருப்பத்தூர் மாவட்ட எல்லை யானது, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கினாலும், வாணியம்பாடி செட்டியப்பனூரில் இருந்து திருப்பத்தூர் வரை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து சீரான போக்குவரத்து பயணத்துக்கு ஏற்ற சாலையாக இல்லாமல் உள்ளது.
சுமார் 22 கி.மீட்டர் தொலைவுள்ள இச்சாலையை கடக்க வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் இச்சாலையை சீரமைக்க வேண்டும் என வேலூர் மாவட்டத்துடன் திருப்பத்தூர் இணைந்திருந்தபோதே வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் கோரிக்கை மனு அளித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு வேலூரில் இருந்து திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. ஆனால், மாவட்டம் பிரிக்கப்பட்டு ஓராண்டு முடிந்த பிறகும் வாணியம்பாடி - திருப்பத்தூர் சாலை சீரமைக்கப்படவில்லை.
இரு சக்கர வாகனங்கள், கார்கள், லாரிகள் மற்றும் பேருந்துகளில் பய ணிப்போர் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்து சமூக வலைதளங் களில் பொது மக்கள் தங்களது ஆதங் கத்தை வெளிப்படுத்தியும் வந்தனர்.
ஆனால், ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வந்ததால், சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், வாகன ஓட்டிகள் தினசரி அனுபவித்து வரும் வேதனையை தீர்க்க எண்ணிய வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்த ‘டீல் பிரதர்ஸ்’ என்ற சமூக அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாமாக முன்வந்து தங்களது சொந்த பணத்தை செலவழித்து வாணியம்பாடி - திருப்பத்தூர் சாலையை சீரமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை வாணியம்பாடி செட்டியப்பனூரில் நேற்று தொடங்கினர்.
வாணியம்பாடியில் இருந்து திருப்பத் தூர் வரை சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவுக்கு குண்டும், குழியுமாக உள்ளசாலையில் ஜல்லி கற்கள், சிமென்ட் கலவை மற்றும் மணலை கொட்டி (‘பேட்ச் ஒர்க்’) செய்து சாலையை சீரமைத்தனர். இப்பணியில் சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
சமூக ஆர்வலர்களின் சாலை சீரமைக் கும் பணிக்கு அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் நன்றி தெரி வித்தனர். மேலும், பல்வேறு தரப்பினர் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் கள் தரப்பில் கூறும்போது, "எங்களால் முடிந்த வரை வாணியம்பாடி - திருப்பத்தூர் சாலையை சீரமைத்துள்ளோம். ஆனால், முழுமையாக இச்சாலையை மாவட்ட நிர்வாகம் புதுப்பிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஆட்சியர் சிவன் அருள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago