திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் தொலைபேசி வழியாக வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
110 அழைப்புகள் வரப்பெற்றன. பொதுமக்கள் பலர் நேரிலும் மனு அளித்தனர்.
பல்லடம் கணபதிபாளையம் கள்ளிமேடு பகுதி பொதுமக்கள் அளித்த மனு விவரம்:
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த எங்களுக்கு, 2002-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தலா 2 சென்ட் வீதம் 153 பேருக்கு இலவச பட்டா வழங்கினார். அதை அளந்து தர அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தினோம். தாமதமானதால், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தோம். இந்நிலையில், முறைகேடாக பட்டா பெற்றிருப்பதாகக் கூறி, பட்டாக்களை ரத்து செய்தனர். அதே நிலத்தை புதிய பயனாளிகளுக்கு தேர்வு செய்து, கடந்த ஆண்டு வழங்கினார்கள். இதில் தகுதியானவர்களை விடுத்து தகுதியற்றவர்கள் பலருக்கு பட்டா வழங்கப்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், அரசு ஊழியர்கள், திருமணமாகி சென்றவர்கள், வசதியானவர்கள் என பலருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதுடன், எங்களைப்போல பாதிக்கப்பட்டுள்ள 98 பேருக்கு இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
டாஸ்மாக் கடை மூடப்படுமா?
நெருப்பெரிச்சல் வாவிபாளை யம் பொதுமக்கள் அளித்த மனுவில், "எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டோம். இதையடுத்து, 90 நாட்களுக்குள் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவது என்றும், வேறு இடம் கிடைக்கவில்லையென்றால் கடையை நிரந்தரமாக மூடுவது என்றும் உறுதி அளித்து அதிகாரிகள் கையெழுத்திட்டனர். அதன்படி, கடந்த 19-ம் தேதிகடை மூடப்பட்டிருக்க வேண்டும்.ஆனால், இன்று வரை கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உறுதி அளித்தபடி கடையை மூடாததை கண்டித்து, வரும் 16-ம் தேதி எங்கள் பகுதியில் அனைத்து வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு, வாவிபாளையம் பகுதியில் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
தார் சாலை
குண்டடம் ஒன்றியம் எல்லப்பாளையம்புதூர் கிராம மக்கள் அளித்த மனுவில், "எல்லப்பாளையம்புதூர் - வஞ்சி பாளையம் செல்லும் சாலை, மண் சாலையாக உள்ளது.700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்திவரும் நிலையில், குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வரவும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பால் கொள்முதல் நிலையம், நியாயவிலைக் கடை, ஆரம்ப சுகாதார நிலையம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியத் தேவைகளுக்கு சென்று வரவும், விவசாயிகள் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலம் என்பதால், தற்போது சேறும், சகதியுமாக உள்ளது. உடனடியாக தார் சாலையாக மாற்றித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago