அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்குட்பட்ட பல் மருத்துவக் கல்லூரியில் தனியார் கல்லூரிகள்கட்டண கெடுபிடி இருக்கிறது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கும்தொகையையே வசூலிக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் திரண்டு வந்து துணைவேந்தரிடம் முறையிட்டுள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயிலும் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்களை அடுத்த ஆண்டுக்காண கல்வி கட்டணத்தையும் இப்போதே கட்டினால் தான் தேர்வுக்கு அனுமதிக்க முடியும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 14-ம்தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில் கல்விக் கட்டணம் முழுவதையும் கட்டாத மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுநிறுத்தி வைத்துள்ளதாக மாணவர்களின் பெற்றோர் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்று கூடி வருத்தம் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் துணைவேந்தரை சந்தித்து, கட்டணத்தைக் கட்ட 3 மாதங்கள் அவகாசம் கேட்டனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் பெற்றோர் தரப்பில் இருந்து தங்கள் கோரிக்கையை மனுவாக துணைவேந்தரிடம் அளித்தனர்.
பெற்றோர் தரப்பில் இருந்து செய்தியாளர்களிடம் பேசிய நீலாவதி என்பவர் கூறுகையில், “இந்த பல்கலைக்கழகத்தை அரசுஏற்றுள்ளது. இங்கு செயல்படும் மருத்துவக் கல்லூரியை கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாகவும் அரசு அறிவித்துள்ளது.
இந்தநிலையில் தனியார் கல்லூரிக் கட்டணத்தை விட அதிகளவில் கட்டணம் வசூலிக்கபடுகிறது.
தற்போது தேர்வுக்கு 5 நாட்களே உள்ள நிலையில் பல் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு கட்டணத்தையும் சேர்த்து முழு கட்டணத்தையும் இந்த தேர்வுக்குள் கட்ட வேண்டும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாணவர்களுக்கும் பழைய நிலுவைக் கட்டணத்துடன் நடப்பாண்டு கட்டணத்தையும் சேர்த்து ரூ. 6 லட்சத்திற்கு மேல் கட்டணம் வருகிறது.
கரோனா காலத்தில் அனைவரும் சிரமத்தில் உள்ள நிலையில், இந்த உத்தரவு மாணவர்கள் மற்றும் பெற்றோராகிய எங்களுக்கும் மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர்களை முதலில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.
மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்ட பிறகும் ஏன் அதிக கட்டணதை வசூல் செய்கிறார்கள்? அரசு மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கும் தொகையே இங்கு வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago