காஞ்சிபுரம்-செங்கல்பட்டு செல்லும் பிரதான சாலை கனமழையால் கடுமையாக சேதமடைந்து உயிர்பலி வாங்கும் பள்ளங்களுடன்காணப்படுவதால் அதை சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்ததால் முக்கிய சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. இந்நிலையில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் பிரதான சாலை கனமழையால் பல்வேறு இடங்களில் கடுமையாக சேதமடைந்துள்ளது.
காஞ்சிபுரம் நகரின் நுழைவு வாயிலான முத்தியால்பேட்டை, பெரியார் நகர், கன்னிகாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மேற்கண்ட நெடுஞ்சாலையில் பெரியஅளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
இதேபோல் வாலாஜாபாத் மார்க்கெட் முதல் பழையசீவரம் வரையில் நெடுஞ்சாலையில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், பேருந்துகள் அப்பகுதியில் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. மேலும், அச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
இதனால், மேற்கண்ட சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோர குடியிருப்பாளர்கள் கூறும்போது, “பச்சையப்பன் ஆடவர் கல்லூரி அருகே நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கின. இதில்,வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்ற பெண்கள் பலத்த காயமடைந்தனர். முத்தியால் பேட்டை பகுதியில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் அரசு பேருந்துகளும் சாலையில் இருந்து இறங்கி குடியிருப்புகளை ஒட்டி செல்லும் நிலை உள்ளது” என்றனர்.
இதுகுறித்து, நெஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, “காஞ்சிபுரம்- செங்கல்பட்டு செல்லும் நெடுஞ்சாலை, 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின்கீழ் சாலை அமைக்கப்படும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago