உரிமம் பெற ஓட்டுநர்களுக்கு தேர்வு வைக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும், என திருச்செங்கோட்டில் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
திருச்செங்கோட்டில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சிப் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
டீசல், பெட்ரோல் விற்பனையை தனியாருக்கு கொடுத்துவிட்டால் விலை குறையும் என்று மத்திய அரசு கூறி ஏமாற்றியது. கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் டீசல், பெட்ரோல் விலை கட்டுப்படுத்த முடியாமல் சென்றுகொண்டிருக்கிறது. சட்டத்தை இயற்றி தனியாருக்கு கொடுத்த காரணத்தினால் இன்றைக்கு எதுவும் செய்ய முடியாமல் அரசாங்கம் உள்ளது. அதே நிலைதான் விவசாய திருத்தச் சட்டங்களுக்கும் வரும். பாஜக கட்டுப்பாட்டில் தமிழக முதல்வர் இருக்கும் காரணத்தினால் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த சட்டங்களை ஏற்றுக்கொண்டு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்.
ஓட்டுநர்கள் தட்டுப்பாடு நிலவி வருவதால் உரிமம் பெற ஓட்டுநர்களுக்கு தேர்வு வைக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும். அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சுரப்பா நியமனத்தின் போது எதிர்ப்பு தெரிவித்தோம், என்றார்.
பேட்டியின்போது, நாமக்கல் மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், மேற்கு மாவட்ட செயலாளர் நதிராஜவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago