அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், வியாபாரிகள் நெல்விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அந்த நெல் அரசுடமையாக்கப்படும், என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த நன்செய் புளியம்பட்டி ஊராட்சியில் அரசு நெல் கொள்முதல் மையத்தைத் தொடங்கி வைத்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில் தற்போது 5 இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது மாவட்டம் முழுவதும் 22 நெல் கொள்முதல் மையங்களைத் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக நடப்பு ஆண்டு 90 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படவுள்ளது. ‘ஏ’ கிரேடு நெல், மாநில அரசின் மானியத்துடன் சேர்த்து, குவிண்டால் ரூ.1958-க்கு கொள்முதல் செய்யப்படும். பொதுரக நெல் குவிண்டால் ரூ.1918-க்கு கொள்முதல் செய்யப்படும்.
இந்த மையங்களில் வியாபாரிகள் நெல் விற்பனை செய்வது கண்டறியப் பட்டால், அந்த நெல் முழுவதும் அரசுடமையாக்கப்படும்.
அதே போல், விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால், நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வியாபாரிகள் நெல் விற்க அதிகாரிகள் அனுமதி அளித்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தடப்பள்ளி - அரக்கன்கோட்டை கால்வாய்களின் பக்கவாட்டுச் சுவர் மட்டுமே கான்கிரீட் செய்யப் படுகிறது.
தரைத்தளம் கான்கிரீட் செய்யப்படப்போவதில்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், கோட்டாட்சியர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago