ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் கடையநல்லூரில் 5 பேர் கைது

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூர்-பண்பொழி சாலையில் வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடையநல்லூர் போலீஸார் அப்பகுதியில் ரோந்து சென்றபோது, அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், மரத்தூள் மூட்டைகளுக்கு அடியில் புகையிலை பொருட்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. லாரியை ஓட்டி வந்த சேலம் அசுரகாடு வீதியைச் சேர்ந்த வினோத்குமார்(25) என்பவரை கைது செய்து, லாரி மற்றும் ரூ.4,95,312 மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், மற்றொரு வாகனத்தில் புகையிலைப் பொருட்களை கடத்திச்செல்ல முயன்ற செங்கோட்டையைச் சேர்ந்த அழகுமுத்து (28), இளங்கோ(21) ஆகியோரை கைது செய்து, அவர்களது வாகனம் மற்றும் ரூ.2,72,371 மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அட்டைகுளம் பகுதியில் ரோந்து சென்ற கடையநல்லூர் போலீஸார், அந்த வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. வாகனம் மற்றும் அதில் இருந்த ரூ.2,27,371 மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். புகையிலைப் பொருட்களை கடத்த முயன்ற காசிமேஜர்புரம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் பிரபு (36), மதன் ராஜ் (24) ஆகியோரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்தும் மொத்தம் ரூ.10,40,054 மதிப்புள்ள புகையிலை பொருட் கள் மற்றும் 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்