புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக போராட்டம் மோடி, அம்பானி உருவப் படங்களுக்கு தீ வைப்பு; 494 பேர் கைது

By செய்திப்பிரிவு

டெல்லியில் போராடி வரும்விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும்விவசாய அமைப்பினர் நேற்று போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மேட்டுப்பாளையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கனிமொழி எம்.பி பேசிய தாவது: விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைக்கவேவேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அத்தியாவ்சியப் பொருட்கள் பட்டியலில் இருந்து பருப்பு வகைகள், எண்ணெய்க்கான விதைகள், உருளைக்கிழங்கு, வெங்காயத்தை நீக்க வழிவகை செய்துள்ளனர். இதன்மூலம் அவற்றை பதுக்கி விற்கலாம். இதுபோன்ற பதுக்கலால் ஏற்படும் விலைஉயர்வால் ஏழை மக்கள் அதிகம்பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பும், மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் சரவணம்பட்டியிலும், கிழக்கு மாவட்டபொறுப்பாளர் சேனாதிபதி தலைமையில் மலுமிச்சம்பட்டியிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

திருப்பூர்

திருப்பூர் மத்திய மாவட்ட திமுக சார்பில், மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் தலைமையில் ரயில் நிலையத்திலுள்ள பெரியார் - அண்ணா சிலைகள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளை மத்திய அரசு நசுக்குவதை சித்தரிக்கும் வகையில், திமுகவினர் காய்கறி மாலை அணிந்து மாட்டு வண்டியில் வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். பெண்கள் உட்பட சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல, பல்லடம் நகரில் கொசவம்பாளையம் பிரிவு சாலையில் வடக்கு மாவட்ட திமுக சார்பில், வடக்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது உடுமலையில் தாராபுரம் சாலையில் தெற்கு மாவட்ட செயலாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பச்சை நிற துண்டு கட்டிக்கொண்டும், கையில் பதாகைகளை பிடித்தவாறும் கட்சியினர் பங்கேற்றனர்.

உதகை

நீலகிரி மாவட்ட திமுக சார்பில் உதகை ஏ.டி.சி. சுதந்திர திடலில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் வரவேற்றார்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா தலைமை வகித்து பேசும்போது, "மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைகூட கிடைக்காது. அரசு கொள்முதல் நிலையங்கள், மண்டிகள், ஒழுங்குமுறை விற்பனை நிலையங்கள் மூடப்படும். இந்த சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம்" என்றார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது,"ஊழல் குறித்து விவாதிக்க அழைத்ததற்கு முதல்வர் எந்த பதிலும்அளிக்கவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல் செய்தார் என உச்ச நீதிமன்றமே கூறியது. அவரது புகைப்படத்தை வைத்துக்கொண்டு அதிமுகவினர் திரிகின்றனர். அவரை போலவே ஊழல் செய்வேன், ஓட்டு போடுங்கள்என்கிறார்களா?" என்றார்.

மோடி உருவப்படம் எரிப்பு

திருப்பூர் ஆட்சியர் அலுவலகம்முன்பு நேற்று நடந்த போராட்டத்துக்கு, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.குமார் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர்கள் சின்னச்சாமி (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்(சிபிஐ), எஸ்.ஆர்.மதுசூதனன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஎம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பங்கேற்ற விவசாயிகள், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி, அம்பானிமற்றும் அதானியின் புகைப்படங்களை கிழித்ததுடன், பிரதமர் மோடி மற்றும் அம்பானியின் உருவப் படங்களுக்கு தீ வைத்தனர். அங்கிருந்த போலீஸார் போராட்டக்காரர்களை தடுத்து, தீயிட்டு எரிக்கப்பட்ட புகைப்படங்கள் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதுதொடர்பாக 31 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

நீலகிரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

உதகையில் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். அவர்களை போலீஸார் தடுத்து, 28 பெண்கள் உட்பட 88 பேர் கைது செய்தனர்.

கூடலூரில் இடை கமிட்டி செயலாளர் குஞ்சுமுகமது தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கும் பிரதமரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. மறியிலில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்