சரியாக திட்டமிடாமல் சாலையைவிட பல அடி உயர்த்தி கட்டப்பட்ட சிறு பாலத்தால் மழைநீரும், கழிவுநீரும் கடைகளுக்கு புகுந்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள்சேதமடைந்து வருவதாகவியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பூரில் சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் லட்சுமி நகர் பிரிட்ஜ்வே காலனி விரிவு சாலையும், ஓம் சக்தி கோயில் பிரதான சாலையும் சந்திக்கும் இடத்தில், சில மாதங்களுக்கு முன்பு சிறு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம், சாலை மட்டத்தைவிட மூன்று முதல் நான்கு அடி வரை உயர்த்தி கட்டப்பட்டுள்ளது. ஓம் சக்தி கோயில் சாலையின் இருபுறம் உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தெற்கு நோக்கி ராஜவாய்க்கால் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. இப்போது, இந்த பாலம் அந்த வாய்க்கால்களின் குறுக்காக கட்டப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணியின்போதே கழிவுநீர் வடிந்து செல்வதற்கும், மழை காலத்தில் தண்ணீர் வடிந்துசெல்வதற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். ஆனால், அதை பொருட்படுத்தாமல் பாலம் கட்டி முடிக்கப்பட்டதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.
பொருட்கள் சேதம்
இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கூறும்போது, "ஒன்றரை மாதத்துக்கு முன்பு பாலம் கட்டி முடிக்கப்பட்டு, வாகனப்போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. திருப்பூரில் கனமழை பெய்யும்போதெல்லாம், ஓம் சக்தி கோயில் சாலையில் இரண்டு, மூன்று அடி உயரத்துக்கு சாக்கடை மற்றும் மழைநீர் தேங்கி நிற்கிறது. புதிதாக கட்டிய பாலத்தின் ஓரத்தில் சிறு துவாரம் ஏற்படுத்திக் கொடுத்து, அதில் மழை நீர் வடிந்து சென்றுவிடும் என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள். இந்நிலையில், கடந்த வாரம் பெய்த கன மழையில், ஓம்சக்தி கோயில் சாலையில் மழைநீருடன், கழிவுநீரும் வெள்ளமாக பெருக்கெடுத்தோடியது.புதிய சிறுபாலம் பகுதிதடுப்பணைபோல அமைந்திருப்பதால், அப்பகுதியின் அருகில் உள்ள அனைத்துக் கட்டிடங்களிலும் கழிவுநீர் புகுந்தது. கடைகளில் இருந்த அரிசி, சர்க்கரை மூட்டைகள், மளிகைப் பொருட்கள் அனைத்தும் நாசமானது. மற்றொருமருந்து கடைக்குள் தண்ணீர் புகுந்ததால் பிஸ்கெட், பஞ்சு, மருந்து பொருட்கள், சோப்பு ஆகியவை சேதமாகின. ரூ.40 ஆயிரத்துக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், அருகே உள்ளபின்னலாடை நிறுவனத்துக்குள்ளும் சாக்கடை கழிவு, மழைநீர்முழுமையாக புகுந்ததில், இயந்திரங்கள், ரப்பர் மற்றும் நூல் பண்டல்கள் சேதமாகின. மழை பெய்யும்போதெல்லாம் இதுபோன்ற பாதிப்பு தொடரும் நிலை உள்ளதால், உடனடியாக சீரமைக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபட வேண்டும்" என்றனர்.
இரண்டு மாதங்களில்...
திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர் செல்வநாயகம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘மழை அதிகமாக இருந்ததாலும், மற்றொரு பகுதியில் சாக்கடை பணி நடைபெற்று வருவதால் கழிவுநீர் புகுந்துள்ளது. சாலை மற்றும் சாக்கடை கால்வாய் பணிகள் நிறைவடையும்போது, பாலத்தின் உயரம் சரியாகிவிடும். மேற்கண்ட பணிகள் இரண்டு மாதங்களுக்குள் முடிக்கப்பட்டுவிடும். அதன்பிறகு, கடைகளுக்குள் தண்ணீர் புகுவதற்கு வாய்ப்பில்லை’’ என்றார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago