மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூரில் நேற்று தலைமை தபால் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தினர். மாநிலக்குழு உறுப்பினர் குளோப் தலைமை தாங்கினார். நகர செயலாளர் அரிகிருஷ்ணன், நிர்வாகிகள் அமாவாசை, மனோகர், நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோரிக்கைகள் குறித்து முழக்கங்களை இட்டவாறு தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முன்றவர்களை போலீஸார் கைது செய்து செய்தனர்.
இது போல சிதம்பரத்தில் சேகர் தலைமையில் மேலவீதியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போலீஸார் அவர்களை கைது செய்தனர். இது போல பண்ருட்டி, விருத்தாசலம், புவனகிரி, முஷ்ணம், திட்டக்குடி, காட்டு மன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட 9 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மொத்தமாக கடலூர் மாவட்டத்தில் 125 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரத்தில் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சௌரிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் பங்கேற் றவர்கள், வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட அரசாணை, மற்றும் பிரதமரின் உருவப்படத்தை எரிக்க முயன்றனர். உடனே அங்கிருந்த போலீஸார் 5 பெண்கள் உட்பட 42 பேரை கைது செய்து, மாலையில் விடுவித்தனர். இதே கோரிக்கைகளை வலியிறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திண்டிவனம் அஞ்சல் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் இன்ப ஒளி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் ஜென்மராக்கினி மாதா கோயில் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ராஜாங்கம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில செயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா கலைநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் மோடி, அம்பானி, அதானி ஆகியோரின் உருவபொம்மைகளை எரித்தனர். இதனை அங்கிருந்த போலீஸார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அவற்றை அப்புறப்படுத்த முயன்றபோது போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago