பெருமழையால் நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே சிறார், இளைஞர்களை ஏரி, ஆறு, குளங்களில் குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க கூடாது என கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அண்மைக் காலமாக நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. கடும் வறட்சி நிலவி வந்த நிலையில் இது நடைபெற்றது. தற்போது கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இதைப் பார்க்க வேண்டும் என்று பொதுமக்களிடையே ஆர்வம் உள்ளது. அவ்வாறு செல்லும் அவர்கள், தவறி விழுந்து உயிரிழக்கின்றனர். சிலர் குளிப்பதற்காக செல்லும் போதும், உயிரிழக்கும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோடை காலத்தில் நீர் நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளதால், ஆழம் அதிகரித்துள்ளது. இதையறியாத சிலர், பழைய ஆழத்தை மனதில் வைத்துகுளிக்க இறங்கி, உயிரிழக்கின்றனர்.
இதுதவிர செல்ஃபி மோகத்தினால், பின் விளைவுகளை ஆராயாமல், நிரம்பிய நீர் நிலைகளின் அருகில் நின்று படம் எடுத்து தவறி விழும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. மழை வெள்ளத்தில் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற் ஆர்வத்தில் இறங்கி குளிக்கும் சிறார்களும் வெள்ளத்தில் சிக்குகின்றனர்.
எனவே, பெற்றோர் இதைக் கண்காணித்து, தங்கள் வீட்டில் இருக்கும் சிறார் மற்றும் இளைஞர்களை பாதுகாக்க வேண்டியது மிக அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago