யார் அரசியலுக்கு வந்தாலும், திமுகவின் வெற்றி பாதிக்காது என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பயணத்தின் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் எம்.பி.யும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
குன்னூரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அரக்காடு பகுதியில் கடும் மழை மற்றும் குளிரிலும் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார். அப்போது பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பு போன்ற வசதிகளை ஏற்படுத்தி தருமாறு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். திமுக தலைவர் ஸ்டாலினிடம் எடுத்துக் கூறி, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
பின்னர் உதகையில் பழங்குடி யினர் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடிய பின்பு செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது: பிரச்சார பயணத்தில் மக்களை சந்தித்தபோது திமுகவின் வெற்றி உறுதி என தெரிகிறது. இந்த 10 ஆண்டுகளில் மக்கள் எந்த வளர்ச்சித் திட்டங்களும், வேலை வாய்ப்பும் இல்லாமலும் உள்ளனர். தேயிலை விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கரோனாவுக்கு பின்னர் காய்கறி, தேயிலை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உயர் கல்விக்காக வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலையில் நீலகிரி மாணவர்கள் உள்ளனர். வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், நீலகிரி மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கல்லூரிகள் அமைக்கப்படும்.
அரசியலுக்கு வராத வரையில் ரஜினி குறித்து விமர்சனம் செய்வது தேவையில்லை, யார் வந்தாலும் திமுகவின் வெற்றி பாதிக்காது. தமிழகத்தில் பிரதான கட்சிகளாக திமுக மற்றும் அதிமுக உள்ளன. யார் கட்சி தொடங்கினாலும் எங்களைப் பற்றியே பேசுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரச்சார பயணத்தின்போது, மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக், கூடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் மு.திராவிடமணி, தேர்தல் பணிக்குழு செயலாளர் க.ராமசந்திரன் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago