மழைநீரில் மூழ்கிய சம்பா பயிர்கள் இழப்பீடு கோரி கிராம மக்கள் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

புரெவி புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

திருமானூரை அடுத்த முடி கொண்டான் பகுதிகளில் சாகுபடி செய்துள்ள சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியதையடுத்து, அக்கிராம மக்கள் தஞ்சாவூர்- அரியலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வடிகால் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றி, தூர்வார வேண்டும். மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தகவலறிந்து வந்த திருமானூர் போலீஸார், நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்ததன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த இடைவிடாத மழையால் திருமானூரை அடுத்த வெற்றியூர் கிராமத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

இதேபோல, ஜெயங்கொண்டத் தில், சிதம்பரம் தேசிய நெடுஞ் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் சாலையோரத்தில் உள்ள கடைகள், குடியிருப்புகள் நீரால் சூழப்பட்டுள்ளன. அரிய லூர்-கடலூர் மாவட்டத்தை இணைக்கும் வெள்ளாற்றின் குறுக்கே கோட்டைக்காடு-சவுந்தி ரசோழபுரம் இடையே அமைக் கப்பட்டிருந்த தற்காலிக தரைப் பாலம் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது.

திருமானூர், ஏலாக்குறிச்சி, காமரசவல்லி, தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. மேலும், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம் உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் வயலில் அடியோடு சாய்ந்துள்ளன. இதனால் மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

வாய்க்கால் மதகு உடைப்பு

அரியலூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக குல மாணிக்கத்தை அடுத்த செம்பியக் குடியில் உள்ள நந்தை யார் வாய்க்காலின் முதல் மதகில் உடைப்பு ஏற்பட்டு, வெளியேறிய நீர் அருகில் உள்ள வயல்களில் புகுந்ததால், அதில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் மூழ்கின. தகவலறிந்து வந்த பொதுப்பணித்துறையினர் மணல் மூட்டைகளை அடுக்கி உடைப்பை சரிசெய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்