குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணியின் எதிரொலியாக, செங்கம் அடுத்த கரியமங்கலம் ஏரிக்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் தண்ணீரை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மலர் தூவி வரவேற்றார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் ஏரி, குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.97 லட்சத்தில் சீரமைக்கும் பணி நடைபெற்றது. நீர்வரத்துக் கால்வாய் தூர் வாரப்பட்டுள்ளது. இதன் பயனாக கடந்த 36 ஆண்டுகளுக்கு பிறகு, ஏரிக்கு தண்ணீர் வருகிறது.
செங்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், கரியமங்கலம் ஏரிக்கு வருகிறது. இந்த தண்ணீரை மலர் தூவி இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச் சந்திரன் நேற்று வரவேற்றார். அப்போது, தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். கரியமங்கலம் ஏரிக்கு நீர்வரத்து தொடங்கியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.4.87 கோடியில் செங்கம், தோக்கவாடி, கரியமங் கலம் மற்றும் காரப்பட்டு ஏரிகள் மற்றும் நீர்வரத்துக் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.
இதனால், குப்பநத்தம் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், செங்கம் மற்றும் தோக்கவாடி ஏரிகளை சென்றடைந்து நிரம்பியது. பின்னர், அந்த ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் மூலம், கீழ் பகுதியில் உள்ள 10 ஏரிகள் நிரம்பி வருகின்றன.
அதன்படி, செங்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், தூர் வாரப்பட்ட கால்வாய் வழி யாக கரியமங்கலம் ஏரிக்கு நீர் வரத்து தொடங்கி உள்ளது. 36 ஆண்டுகளுக்கு பிறகு, ஏரிக்கு தண்ணீர் வருகிறது. கரியமங்கலம் ஏரி நிரம்புவதன் மூலம் 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago