டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தருமபுரி, அரூர், ஊத்தங்கரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தேசியமய மாக்கப்பட்ட வங்கி மற்றும் சிங்காரப்பேட்டை பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குழு செயலாளர் எத்திராஜ் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி, வேலு சபாபதி, முத்துக்குமார், ராஜா, ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில், சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க வட்டக்குழு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். இதில் தமிழக விவசாயிகள் சங்க வட்ட தலைவர் சின்னராஜ், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். மறியல் பேராட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தருமபுரி பிஎஸ்என்எல் நிறுவனம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தேவராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, மாதேஸ்வரன், காரிமங்கலம் ஒன்றிய செயலாளர் கோபால், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் மணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். அருரில் மாவட்ட துணை செயலாளர் தமிழ்குமரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago