ஏக்கல்நத்தம் மலைக் கிராமத்துக்கு ரூ.2.50 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஏக்கல்நத்தம் மலைக் கிராமத்துக்கு ரூ.2.50 கோடி மதிப்பில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் நாரலப்பள்ளி ஊராட்சி கடைகோடி மலைக் கிராமமான ஏக்கல்நத்தம் கிராமத்துக்கு புதிதாக தார் சாலை அமைக்கும் பணியை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

மலைக் கிராமமான ஏக்கல்நத்தம் கிராமத்துக்கு சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. பொதுமக்கள் இந்த கிராமத்துக்கு நடந்து தான் சென்று வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது ரூ.2.50 கோடி மதிப்பில் மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதி மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சி நிதியில் இருந்து தார் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. சாலையில் மலையேற்றப் பகுதிகளில் மழைநீர் சாலைகளை அரிக்காத வகையில் 254 மீட்டர் தூரத்துக்கு சிமென்ட் தடுப்புச் சுவர் அமைக்கப் பட்டுள்ளது.

2 இடங்களில் மழை நீர் செல்லும் பாதையின் குறுக்கே சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிக்கப்பெற்று தார் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஆட்சியர் இருளர் இன காலனியைப் பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது பொதுமக்களிடம் பேசிய ஆட்சியர், ஏற்கெனவே 11 குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கப்பட்டு தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது இப்பகுதியைச் சேர்ந்த 6 இருளர் இன மக்களுக்கு பசுமை வீடு ஒதுக்கீடு கிடைத்துள்ளது. பசுமை வீடு கட்ட அவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

ஆய்வின் போது, வனத்துறை பொறியாளர் பாஸ்கர், வனச்சரக அலுவலர்கள் சக்திவேல், முருகேசன், வனச்சரகர்கள் ரவிச் சந்திரன், சம்பத்குமார், பாஸ்கரன், தாசில்தார் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி உமாபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்