புரெவி புயலின் வேகத்துக்கு ஏற்பமீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
புரெவி புயல் முன்னேற்பாடு பணிகள் குறித்து வருவாய், பேரிடர்மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆய்வு செய்தார். அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:
புரெவி புயலை கூர்ந்து கவனித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கும், கட்டுப்பாட்டு அறையின் மூலம் மாவட்ட நிர்வாகமும், மாநிலஅவசர கட்டுப்பாட்டு அறையும் தயார் நிலையில் உள்ளன. கடந்த ஒரு வாரமாக ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைதிரும்ப வேண்டும் எனவும், யாரும் மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும்எச்சரிக்கை விடுத்து அதிகாரிகள்துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி அனைத்து மீனவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள் பாதுகாப்பான பகுதியில் கரைஒதுங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. புரெவி புயலின் வீரியம் குறித்தும், காற்றின் வேகம் 90 கிலோ மீட்டர் இருக்கும் என்பதும் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடல் பகுதியை புரெவி புயல் கடந்து, தற்போது பாம்பன், கன்னியாகுமரி இடையே கடக்கக்கூடும் என்ற அறிகுறியின் பேரில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுவாக புயல் ஒரே இடத்தில் கடக்கும் என்றால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறையும். ஆனால் கஜா புயல் போன்று புரெவி புயலும் வலுவுடன் இருக்கும் காரணத்தால் மழைப்பொழிவு, காற்று அதன் வேகத்துக்கு ஏற்பமீட்பு நடவடிக்கையை எடுக்கமுன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசிடம் இருந்து தேவைப்படும் கடற்படை, விமானப்படை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தருவதாக தமிழக முதல்வர் பழனிசாமியிடம், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குமரிமாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து நீர்வரத்து அதிகமாகும்போது உபரிநீரை வெளியேற்றுவதற்கான நிலைப்பாடுகள் பொதுப்பணித்துறை வாயிலாக கண்காணிக்கப்பட்டு மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. புயல் நாளைக்குள் (இன்று) கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து அலுவலர்களும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள். எனவே பொதுமக்களும், மீனவர்களும் அச்சப்பட வேண்டாம். தாழ்வான பகுதிகள் மற்றும் கடற்கரையோர பகுதிகளில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. புரெவி புயலால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலாசாமி, மீன்வளத்துறை இயக்குனர் ஜெயகாந்தன், மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், எஸ்.பி. பத்ரிநாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலி
இதுபோல், திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வி.எம்.ராஜலெட்சுமி, மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கருணா கரன், மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago