டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் திருப்பூரில் தலைமை அஞ்சலகத்தை நேற்று 2-ம் நாளாக முற்றுகையிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக குமரன் நினைவகம் முன் கூடிய கட்சியினர், பேரணியாக வந்து அஞ்சலகத்தை முற்றுகையிட்டனர். திருப்பூர் தெற்கு கமிட்டி தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் கே.காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களைஎழுப்பினர்.
காவல் துறையினர் தடுப்பையும் மீறி முற்றுகையிட்ட 80 பேரை,பாதுகாப்புப் பணியில் இருந்த வடக்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் அருகே அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெற்ற தொடர் முழக்கப் போராட்டத்துக்கு விவசாய சங்கத் தலைவர் குமார், செயலாளர் சின்னசாமி, விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பழனிச்சாமி, சிபிஐ மாவட்டச் செயலாளர் ரவி, ஏஐடியுசி சேகர், தொமுச செயலாளர் சரவணன்உட்பட அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். காய்ந்த சோளப் பயிரோடு பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினர்.
உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் பாலசுப்பிர மணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மகளிரணி செயலாளர் ராஜரீகா, மாவட்டத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் சோமசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமையில் ஏர் கலப்பை பேரணி திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற 145 பேரை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ப.கோபி தலைமையில், காங்கயத்தில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே ஏர் கலப்பை பேரணி நடந்தது.
உடுமலை
உடுமலை பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்க மாவட்டப்பொருளாளர் வி.சவுந்திரராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், புதிதாக இயற்றப்பட்ட வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் விவசாய சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உதகை
நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி சுதந்திர திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தாலுகா செயலாளர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago