சிப்காட் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவைத் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் விவசாய நிலம் பறிக்கப்பட்டால் வாழ்வாதாரம் பாதிக்கும் என புகார்

By செய்திப்பிரிவு

சேவூர் அருகே 846 ஏக்கரில் தொழில்பூங்கா அமைக்கும் நடவடிக்கையாக திட்ட அலுவலர்கள் நேற்று முன் தினம் ஆய்வு மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 5 ஊராட்சியை சேர்ந்த மக்கள் அவிநாசியில் உள்ள சட்டப்பேரவைத் தலைவர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

திருப்பூரை ஒட்டியுள்ள சேவூர் அருகே தத்தனூர் ஊராட்சி பகுதியில் 846 ஏக்கரில் தொழில் பூங்கா அமைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாக திட்ட அலுவலர்கள், வருவாய்த் துறையினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவிநாசி சட்டப்பேரவை உறுப்பினரும், சட்டப்பேரவைத் தலைவருமான ப.தனபாலை சந்திக்க 5 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று வந்தனர். அங்கு அவர் இல்லாததால், அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு கூறியதாவது:

தத்தனூர், புலிப்பார், பாப்பாங் குளம், புஞ்சை தாமரைக்குளம், போத்தம்பாளையம் என 5 ஊராட்சிகளை சுற்றி சுமார் 5000 பேர் வசிக்கிறோம். நாங்கள் அனைவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறோம். விவசாயத்தை அழிக்கும் வகையில், சிப்காட் நிறுவனத்துக்கு தொழில் பூங்கா அமைக்க நிர்வாக அனுமதி பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிகிறோம். தொழில்பூங்கா அமைக்க எங்கள் நிலத்தை பறித்தால், எங்களின் வாழ்வாதாரம் அழியும். விளை நிலத்தை இழந்து சொந்த மண்ணில் அகதிகளாக மாறுவோம். எங்களின் நிலத்தை கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும். இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து பொதுமக்களிடம் மனுவை பெற்றுக் கொண்ட அவிநாசி ஒன்றியக் குழு தலைவர் ஜெகதீசன், மக்களுக்கு இடையூறான எந்த திட்டத்தையும் சட்டப்பேரவைத் தலைவர் அமல்படுத்தமாட்டார் என உறுதி அளித்தார். நிலம் அளப்பது, தென்னை உள்ளிட்ட மரங்களை கணக்கெடுக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அந்த பணிகள் நிறுத்தப்பட்டதால், முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த திமுக துணை பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜிடம் தங்களது கோரிக்கை மனுவை மக்கள் அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்