திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் கலவர தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் நேற்று நடைபெற்றன.
பொதுமக்களுக்கு இடையூறாக நடத்தப்படும் முற்றுகை போராட்டங்கள் மற்றும் இரு பிரிவினர்இடையே ஏற்படும் மோதல் களை தடுத்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் காப்பது குறித்து காவல் துறையினருக்கு பயிற்சி அளிக்க தமிழக காவல் துறை தலைமை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பூர் மாநகரத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு நேற்று கலவர தடுப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. திருப்பூர் குமரன் சிலை அருகில் குடிநீர் கேட்டு மறியல் போராட்டம்நடத்துவது போலவும், உடனடியாக காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது போலவும், ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்துசெல்ல மறுத்ததால், எச்சரிக்கை கொடி காண்பித்தும், அறிவிப்பு செய்தும்,பிறகு உரியஅனுமதி பெற்று கூட்டத்தினரை தடியடி நடத்தி கலைத்து, கைது செய்வதுபோல நேரடியாக ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப் பட்டது.
இதேபோல மங்கலம் சாலை ஆண்டிபாளையம் பிரிவில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு, கலவரம் நடப்பது போன்றும், போலீஸார் விரைந்து சென்று தண்ணீர் பீரங்கி வாகனம் மூலமாக தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, கலவரத்தில் காயமடைந்தவர்களை பாதுகாப்பாக மீட்டு முதலுதவி அளித்து, அவசர ஊர்தியில் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதுபோலவும் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆட்சியர் அலுவலக முகப்பு உட்பட மாநகரில் மேலும் சில இடங்களில் இந்த ஒத்திகை நடைபெற்றது. நிகழ்வுகளை காவல் ஆணையர் க.கார்த்திகேயன் பார்வையிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago