மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி திருச்சி, கரூர், தஞ்சை, அரியலூர் மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி, தெலங்கானா மாநிலங்களில் உள்ளது போல, தமிழ்நாட்டிலும் மாதாந்திர உதவித்தொகையாக மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.3,000, கடும் பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,000 வீதம் வழங்க வேண்டும்.
தனியார் துறை வேலைவாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத பணியிடங்களை தமிழ்நாடு அரசு உறுதி செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மழையையும் பொருட்படுத்தாமல் மாநிலச் செயலாளர் பி.ஜீவா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 350 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கண்ணகி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 29 பெண்கள் உள்ளிட்ட 52 பேரை மாயனூர் போலீஸார் கைது செய்தனர். கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்துகொண்டனர். தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தி, மறியலில் ஈடுபட முயன்ற 75 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago