திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே நிழலி பகுதியில் 400-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.
இந்நிலையில், மேற்கண்ட பட்டாவை கொண்டு மக்கள் குடியேறச் சென்றபோது, ஏற்கெனவே பலரும் அரசு வழங்கிய பட்டாவுடன் குடியிருந்து வந்தனர்.
இதனால் புதிதாக பட்டா வாங்கியவர்கள் பலரும் குடியேற முடியாத நிலை ஏற்பட்டது. 6 ஆண்டுகளாக பட்டா இருந்தும் எங்களுக்கு பலன் இல்லை என்று, திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "2014-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் 400-க்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால், 6 ஆண்டுகளாகியும் பட்டாவை பயன்படுத்த முடியவில்லை. ஏற்கெனவே, அங்கு பட்டா பெற்றவர்களின் பட்டாக்களை ரத்து செய்துதான், எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் வழங்கியது.
அங்கு சென்று முறையிட்ட போது, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமானது. இதுதொடர்பாக மனுவுக்கு மேல் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், மாவட்ட நிர்வாகம் மீது எங்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது.
போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும். மேற்குறிப்பிட்ட இடத்தில் தற்போதுள்ள ஆக்கிரமிப்பை காவல் துறை துணையோடு அகற்ற வேண்டும்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago