சேவூர் அருகே 846 ஏக்கரில் தொழில் பூங்கா திட்ட அலுவலர்கள், வருவாய்த் துறையினர் ஆய்வு

By செய்திப்பிரிவு

பின்னலாடை நகரமான திருப்பூரை பிரதானமாகக் கொண்டு, மாவட்டம் முழுவதும் ஆடை உற்பத்தி தொழில் பல தரப்பு மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. திருப்பூரை ஒட்டியுள்ள அவிநாசி, சேவூர் பகுதிகளில் பின்னலாடை துறை சார்ந்த தொழில்கள் சேவூரை மையமாக கொண்டு இயங்குகிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். இவர்கள், திருப்பூரில் உள்ள பெரிய ஆடை உற்பத்தி நிறுவனங்களிலிருந்து துணிகளை வாங்கி, உற்பத்தி செய்து கொடுத்து வருகின்றனர். மேலும், பெருமாநல்லூர் அருகே திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவுக்கும், சேவூர் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், தொழிலாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சேவூர் அருகே தத்தனூர் ஊராட்சி பகுதியில் 846 ஏக்கரில் தொழில் பூங்கா அமைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாக, திட்ட அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். தத்தனூர், புஞ்சை தாமரைக்குளம், புலிப்பார் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட நிலத்தின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து தத்தனூர் ஊராட்சி மன்றத் தலைவர் விஜயகுமார் கூறும்போது, "தொழிலாளர்களின் சிரமங்களைக் குறைக்கவும், எஞ்சியுள்ள அனைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடிய வகையிலும், தொழில் பூங்கா அமைப்பதற்கு தத்தனூர் ஊராட்சி பகுதியில் 800 ஏக்கர் இடம் வழங்க பொதுமக்கள் தயாராக உள்ளோம். இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்