ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், கட்சி தொடங்கலாம். அதுகுறித்து கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை, என திமுக மகளிரணிச் செயலாளர் எம்.பி கனிமொழி தெரிவித்தார்.
ஈரோட்டில் 2-வது நாளாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக மகளிரணிச் செயலாளர் எம்.பி.கனிமொழி, முனிசிபல் காலனி மற்றும் பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து பெரியார் - அண்ணா நினைவகத்தைப் பார்வையிட்ட கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெரியாரின் கொள்கைக்கு எதிரான அதிமுக ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. பூரண மதுவிலக்கு வருமா என்பது திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிடும்போது தெரியும்.
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து எனக்கு எந்த கருத்தும் கிடையாது. அவர் அரசியலுக்கு வந்த பிறகு, ஏதாவது கருத்துகள் இருந்தால் தெரிவிக் கிறேன். மு.க. அழகிரி எப்படி செயல்படுவார் என்பது அவருடைய தனிப்பட்ட முடிவு. இது ஜனநாயக நாடு.யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அரசியலுக்கு வரலாம். அதைப்பற்றி கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, என்றார்.
கனிமொழி தனது பிரச்சாரப் பயணத்தில் திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். திமுக மாவட்டச் செயலாளர் சு.முத்துசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago