திருப்பூர்-தாராபுரம் சாலையிலிருந்து குடியிருப்புப் பகுதிகளுக்கு செல்ல இடையூறாக இருந்த மையத் தடுப்புகளை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்-தாராபுரம் சாலையில் செட்டிபாளையம் பகுதியிலிருந்து அய்யம்பாளையம், சபரி நகர் உள்ளிட்ட குடியிருப்புகளுக்கு பிரதான சாலையிலிருந்து பிரிந்து செல்ல, சாலையின் மையப்பகுதியில் ஏற்கெனவே இடைவெளி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசல், விபத்து அபாயம் காரணமாக காவல் துறை சார்பில் அந்த இடைவெளி அடைக்கப்பட்டது. இதனால் செட்டிபாளையத்திலிருந்து மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சென்று சுற்றி வர வேண்டிய சூழல் நிலவுவதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்கு செல்லமுடியவில்லை எனக்கூறி நேற்று காலை திருப்பூர்-தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த மையத் தடுப்புகளையும் அகற்றினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மாநகர ஊரக காவல் நிலைய போலீஸார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, செட்டிபாளையம் பகுதியிலிருந்து சுடுகாட்டுக்கு செல்வதற்கான சாலையையும் நெடுஞ்சாலைத் துறையினர் கற்களைக்கொண்டு அடைத்ததால், சுடுகாட்டுக்கு செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. அதனையும் அகற்ற வேண்டும், சம்பந்தப்பட்ட மையத்தடுப்பையும் அகற்றவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இப்பிரச்சினை குறித்து நெடுஞ்சாலைத் துறைக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த போலீஸார், அய்யம்பாளையம், சபரி நகர் பகுதிகளுக்குச்செல்ல இடையூறாக இருந்த மையத்தடுப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுத்தனர். இதனால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago