மூன்று தலைமுறைகளாக குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் திருப்பூர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் தொலைபேசி மூலமாக வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் 97 அழைப்புகள் வரப்பெற்றன. பொதுமக்கள் பலர் நேரிலும் மனு அளித்தனர்.

திருப்பூர் பூலாவரி சுகுமார் நகர் பொதுமக்கள் கூறியதாவது: 44-வது வார்டில் 1994-ம் ஆண்டு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வெ.பழனிசாமி, சுகுமார் நகர் அமைத்து தந்தார். இதையடுத்து எங்கள் பகுதி குடிசை மாற்று வாரியத்துக்கு ஒப்படைக்கப்பட்டது. 1996-ம் ஆண்டு குடிசை மாற்று வாரியம், உலக வங்கியின் திட்டத்தின் கீழ், மனை அளவு செய்து இடத்தின் அளவுக்கு ஏற்ப விலை மதிப்பீடு செய்து 20 ஆண்டு காலஒப்பந்தம் செய்து ஊர் மக்களுக்கு மனை மதிப்பீடு ஒப்பந்தம் செய்தது. குடிசை மாற்று வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, நாங்கள் 495 பேர் பணம் செலுத்தி, அதற்குரிய நிலுவை இல்லாச் சான்று பெற்றோம். மின் இணைப்புக்கும் தடையின்மைச் சான்று பெற்றோம்.

குடிசை மாற்று வாரியத்தின் ஒப்பந்த அடிப்படைக் காலம் முடிந்து 4 ஆண்டுகளாகியும், இன்னும் எங்களுக்குசேர வேண்டிய கிரயப் பத்திரம் இதுவரை வழங்காமல் அரசு அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர். எங்கள் பகுதி 30 சதவீதம் நீர்நிலை எனக்கூறி தட்டிக்கழிக்கின்றனர். அதேசமயம் எங்களைப்போல நிலம் பெற்ற 100 சதவீதம் நீர்நிலையான சங்கிலிப்பள்ளம் பகுதி மக்களுக்கு, கிரயப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கும் அசல் கிரயப் பத்திரத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

அடிப்படை வசதிகள் தேவை

முதலிபாளையம் ஏ.பெரியபாளையம் பாரத் அவென்யூ மக்கள் கூறியதாவது:

முதலிபாளையம் ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தி வருகிறோம். நாங்கள் அனைவரும் வங்கியில் கடன் பெற்று வீடு கட்டி உள்ளோம். குடிநீருக்காக மாதந்தோறும் கணிசமான தொகையை செலவிட வேண்டியுள்ளது. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகில் தேங்குவதால் கடும் துர்நாற்றம் ஏற்படுகிறது. கழிவுநீரில் புழுக்களும் உற்பத்தி ஆவதால், பலரும் குடியிருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எங்கள் பகுதிக்கு குழாய் மூலம் குடிநீர் கிடைக்கவும், கழிவுநீர் வடிகால் வசதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்.

பட்டா வழங்க வேண்டும்

திருப்பூர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மனு அளித்து கூறியதாவது: தென்னம்பாளையம் சந்தை பின்புறம் அம்பேத்கர் காலனியில் 110 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அதேபோல டிஎம்சி காலனியில் 44 வீடுகளில் பலரும் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் அனைவரும் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வருகிறோம். கரோனா தடுப்பில் முன்கள தடுப்புப் பணியாளர்களாக உள்ளோம். சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக 3 தலைமுறைகளாக மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வரும் எங்களுக்கு, குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்