திருப்பூரில் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடைய 3 இளைஞர்களை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாநகரில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து துணை ஆணையர் சுரேஷ்குமார் அறிவுறுத்தல்படி, மாநகர வடக்கு சரக உதவி ஆணையர் வெற்றிவேந்தர் மேற்பார்வையில் ஆய்வாளர் ராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ராயபுரம் பகுதியில் நேற்று முன்தினம் தனிப்படை போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதிவு எண் இல்லாத இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் காங்கயம் சாலை ராக்கியாபாளையத்தை சேர்ந்த பி.நவுபல் (20), ராயபுரம் வள்ளுவர் காலனியை சேர்ந்த ஏ.சதாம் உசேன் (20), ஊத்துக்குளி சாலை கருமாரம்பாளையம் ஆத்துமேடு பகுதியை சேர்ந்த எம்.ஜீவானந்தம் (20) என்பதும், அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என்பதும், திருப்பூரில் பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago