ஆற்காடு அருகே முன்விரோத தகராறில் முதியவரை அடித்து கொலை செய்த வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வாழைப்பந்தல் அருகேயுள்ள அக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முனிரத்தினம் (75). இவருடைய பேரன் முருகன் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி அதே பகுதியில் நெல் தூற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த திருவண்ணாமலை மாவட்டம் அக்கூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜி (37) என்பவர் தண்ணீர் குடிக்கும்போது அவரது கண்ணில் தூசு பட்டது.
கண்ணில் தூசு படும்படி எதற்காக நெல்லை தூற்றுகிறாய் என முருகனிடம், ராஜி கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், முருகனுக்கு ஆதரவாக அங்கு வந்த அவரது தாத்தா முனிரத்தினம் தகராறு செய்துள்ளார். பின்னர், முனிரத்தினத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த ராஜி அங்கிருந்து சென்றுவிட்டார்.
இரண்டு நாட்களுக்கு பிறகு, விவசாய நிலத்துக்கு சென்று கொண்டிருந்த முனிரத்தினத்தை ராஜி மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த சோமு (54), பாபு (46) மற்றொரு பாபு (45) ஆகிய 4 பேரும் சேர்ந்து கற்களால் கடுமையாக தாக்கிவிட்டு தப்பினர். இதில், படுகாயம் அடைந்த முனிரத்தினம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து, வாழைப்பந்தல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜி, சோமு, பாபு உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ராணிப்பேட்டை இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
இந்த வழக்கில் நீதிபதி சீனிவாசன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்ததுடன் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, 4 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு கூடுதல் வழக்கறிஞர் ரவிக்குமார் ஆஜராகினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago