திருப்பூரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகளால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பேருந்துநிலையங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக போக்குவரத்து ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாவட்டச் செயலாளர் செ.முத்துகண்ணன் புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ கட்டுமானப் பணிகளால், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் வெளியூர் பேருந்துகள், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. இதில் கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு கட்டண விகிதங்களை அதிகரித்துபோக்குவரத்து கழக நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளது. இங்கிருந்து, மதுரை ஆரப்பாளையம் செல்லும் வழித்தடத்துக்கு ரூ.145 என கட்டணம் நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தே மதுரை ஆரப்பாளையத்துக்கு ரூ.155 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆரப்பாளையம் செல்வதற்கு ரூ.161 என கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்ட வழித்தட பேருந்துகள் அனைத்தும் கோவில்வழி பேருந்து நிலையத்துடன் தனது வழித்தடத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கிருந்து நகரப் பேருந்துகள் மட்டும் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், யுனிவர்செல் திரையரங்க பேருந்து நிலையத்துக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கும் கட்டணத்தை அதிகரித்துள்ளனர். அத்துடன் புதிய பேருந்து நிலையம் வரும் வெளியூர் பேருந்துகளிலும் ரூ.6 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. காங்கயம் வழித்தட பேருந்துகளில் வந்து இறங்கும் பயணிகள், பழைய பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு நகரப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல நேரடி நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும். திருப்பூரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் கழிப்பறை, பயணிகள் அமருமிடம், இருக்கைகள், சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். பேருந்து கட்டணங்களை குறைக்க அறிவுறுத்துவதோடு, கிராமப்புற பேருந்து சேவையையும் அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago