அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் விரைவில் முடிவடையும் என தமிழக சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தொடங்கி வைத்தார். அதன்பின் அவர் பேசும்போது, ‘‘அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் விரைவில் முடிவுபெறும்.
இப்பகுதி மாணவ, மாணவிகள் மீது அக்கறை கொண்ட தமிழக அரசால், இங்குள்ள அரசு கலைக்கல்லூரி அதற்கான கட்டிடத்தில் செயல்படுகிறது. பொது மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் எவ்வித தங்குதடையுமின்றி கிடைத்திட குடிநீர் திட்டப் பணிகள்தொடங்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் இப்பகுதியில் குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார். விழாவில் 335 பயனாளிகளுக்கு ரூ.1.79 கோடி மதிப்பிலானநலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரி சாலைகள் திட்டம்மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகிய திட்டத்தின் கீழ் ரூ.9 கோடியே 41 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 22 புதிய திட்டப் பணிகளையும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.164.38 கோடி மதிப்பிலான புதிய கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளையும் சட்டப்பேரவை தலைவர் தொடங்கி வைத்தார்.
இதில் கோவை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.திருப்பூரில் நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago