வெள்ளகோவில் அருகே வட்டமலைக்கரை அணையில் கடந்த 25 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாத சூழலில், தண்ணீர் வரத்தை எதிர்பார்த்து கிராம மக்கள், விவசாயிகள் சார்பில் கார்த்திகை தீப நாளான நேற்று 10,008 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.
இதுகுறித்து பொதுமக்கள், விவசாயிகள் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே வட்டமலைக்கரை அணையானது 1979-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. மொத்தம் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அணை 27 அடி நீரை தேக்கி வைக்கும் அளவு கொண்டது. இந்த அணைப் பகுதியில் இருந்து மொத்தம் இரண்டு வாய்க்காலின் வழியாக நீர் சென்று 6,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டு அணை கட்டி முடிக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அணையில் தண்ணீர் இல்லாத சூழலே நிலவுகிறது. அணையின் நீர்த்தேக்க பகுதியில் 100 ஏக்கருக்கும் மேலாக முட்புதர்கள் மட்டுமே நிறைந்து காணப்படுகின்றன. ஆழியாறு அணையில் இருந்து வெளியேறும் பிஏபி வாய்க்காலின் உபரி நீர் முழுவதும் இந்த அணைக்கு வரும் வகையில் திட்டமிட்டு கட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் உபரி நீரும்இல்லாத சூழலில், பல இடங்களில் தடுப்பணைகள் கட்டியதால் இந்த அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாத சூழல் உள்ளது. தற்போது அரசின் சார்பில் திட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், அருகில் உள்ள அமராவதி ஆற்றில்இருந்து தண்ணீர் கொண்டு வந்து அணையை நிரப்ப வேண்டும். அணைக்கு நீர் வரத்து இருக்கும்பட்சத்தில் விவசாயம், மீன்பிடி தொழில் மூலம் 25 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வட்டமலைக்கரை அணைக்கட்டில் கார்த்திகை தீப நாளில் 10,008 தீபம் ஏற்றி விவசாயிகள், ஆர்வலர்கள், பொதுமக்கள் சார்பில் வழிபாடு நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago