அரசால் உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்கக் கோரி தனியார் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

By செய்திப்பிரிவு

அரசால் உயர்த்தப்பட்ட ஊதியமான ரூ.380-ஐ வழங்கக் கோரி மன்னார்குடி நகராட்சியில் பணியாற்றும் தனியார் தூய்மைப் பணியாளர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.290 ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கரோனா ஊரடங்கு காலத்தில் இவர்களின் ஊதியத்தை ரூ.380 ஆக உயர்த்தி வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், ஊதியம் உயர்த்தி வழங்கப்படவில்லை.

இதைக் கண்டித்தும், உடனடியாக ஊதியத்தை உயர்த்தக் கோரியும், மன்னார்குடி நகராட்சியில் பணிபுரியும் தனியார் ஒப்பந்தப் பணியாளர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, சிஐடியு நகர ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் நகரத் தலைவர் திருநாவுக்கரசு, சிஐடியு கவுரவத் தலைவர் ரகுபதி, நகரத் தலைவர் பிச்சைக்கண்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுதொடர்பாக, நகராட்சி தரப்பில் விசாரித்தபோது, “தனியார் நிறுவனம் நிகழாண்டுக்கான ஒப்பந்தத்தைப் பெற்ற பின்னர்தான், ஊதிய உயர்வை ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால், ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க இயலாத நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தனியார் தூய்மைப் பணியாளர்கள் பரிசீலிக்க வேண்டும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்