விவசாயிகளுக்கு எதிராக யுத்தம் தொடங்கியுள்ளது மத்திய அரசு ஆர்.முத்தரசன் குற்றச்சாட்டு

தத்துவ மேதை பிரடெரிக் ஏங்கெல்ஸின் 200-வது பிறந்த நாளையொட்டி திருச்சி பெரிய மிளகுபாறையிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

இந்தியாவில் மதவெறி சக்திகள் தலைதூக்கி உள்ளன. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல், இறுதியில் ஒரே கட்சி, ஒரே கட்சியின் ஆட்சி என்ற திட்டத்தின் மூலம் இந்நாட்டை சர்வாதிகார நிலைக்கு அழைத்துச் செல்ல மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இது நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் ஆபத்தானது.

அதேபோல இடஒதுக்கீடு முறையே இருக்கக்கூடாது என்று சமூக நீதிக்கு எதிரான மோசமான நிலையையும் கொண்டு வர முயற்சிக்கிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டுள்ளது. புயலால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தாழ்வான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அங்கு நிவாரணம் வழங்குவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், இதுபோன்ற பாதிப்புகள் இனியும் தொடராமல் இருக்க நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் விவசாயிகள் போராடிக் கொண்டுள்ளனர். விவசாயிகளை டெல்லிக்குள் நுழையவிடாமல் தடுக்க முயன்று தோற்றுப் போனதால், அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு யுத்தம் தொடங்கியுள்ளது. விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை இந்த போராட்டங்கள் தொடரும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்