கார்பன் ஆலை வெளியேற்றும் கழிவுநீரால் பாதிப்பு குறைதீர் கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குற்றச்சாட்டு

திருப்பூர் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது:

காங்கயம் அருகே அவிநாசிபாளையம்புதூர் கிராமத்தில் அமைந்துள்ள கார்பன் உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் கரும்புகை மற்றும் மாசடைந்த தண்ணீரால், அவிநாசிபாளையம்புதூர் மட்டுமின்றி ஜெ.நகர், சேடங்காளிபாளையம், குழந்தைகவுண்டன்வலசு மற்றும் தொழிற்சாலை அருகில் உள்ள விளைநிலங்கள், கிணறுகள் பாதிப்படைவது தொடர்பாக பலமுறை மனு அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கடந்த 3-ம்தேதி நடந்த பேச்சுவார்த்தையின்போது, அதிகப்படியான தண்ணீர் ஆலைக்குள் கொண்டு செல்வதை நிறுத்துவதாகவும், ஆலையில் இருந்து அதிகப்படியான கரித்துகள்வெளியேறாமல் கட்டுப்படுத்துவதாகவும் திருப்பூர் வடக்கு சுற்றுச்சூழல் பொறியாளர் தெரிவித்திருந்தார். இதுவரை நடவடிக்கை இல்லை. இதில் ஆட்சியர் நேரடியாக தலையிட்டு ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாராபுரம் வட்டம் பனைமரத்துப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள உப்பாறு அணைக்கு, அரசூர்ஷட்டரில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்போது அரசூர் ஷட்டருக்கும், உப்பாறு அணைக்கும் இடையே அமைந்துள்ள 18 தடுப்பணைகளில் நீர் நிரம்பிய பிறகே உப்பாறு அணைக்கு குறைந்தஅளவு நீர் வந்தடைகிறது.உப்பாறுஅணை பாசனத்தை மட்டுமே நம்பி உள்ள விவசாயிகளுக்கும் கால்நடைகளுக்கும் தண்ணீர்கிடைக்காத நிலை ஏற்படுகிறது. அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை போன்று உப்பாறு அணைக்கு அரசூர் ஷட்டரில் இருந்து புதைகுழாய் மூலம் நீரை எடுத்து, உப்பாறு அணையை நிரப்பினால் உபரிநீர் வீணாவது தடுக்கப்படும்.

தாராபுரம் அருகே குள்ளிப்பள்ளத்தில் சுமார் 20 ஏக்கரில், விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து 200-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் தேங்காய் தொட்டிகளை கொண்டுவந்து குவியலாக வைத்து தீ மூட்டி எரிக்கின்றனர். இதனால் குள்ளிப்பள்ளம் பகுதியில் விவசாய நிலங்கள், கால்நடை மேய்ச்சல் நிலங்கள் புகை மூட்டம் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் மற்றும்கால்நடைகள் என யாரும் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த தொழிற்சாலையை உடனடியாக மூடுவதோடு, சம்பந்தப்பட்டநபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இது போன்று, பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, இணை இயக்குநர் (வேளாண்மை) மனோகரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மகாதேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்