காங்கயம் அருகே 3 மாத ஆண் குழந்தை ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தாய், மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன் நேற்று ஆஜரானார். இவ்விவகாரத்தில் தலைமறைவாக இருந்த குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி சேரன்மாதேவி நகரை சேர்ந்தவர் முருகன் (31). அதே பகுதியை சேர்ந்தவர் கவிதா (22). கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் கவிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த 18-ம் தேதி திருப்பூர்மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள மொட்டரப்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தம்பதி தங்கினர்.வறுமை காரணமாக காங்கயம் அடுத்துள்ள கீரனூர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன், விஜி தம்பதியருக்கு ரூ.10 ஆயிரத்துக்கு குழந்தையை விற்றுள்ளனர்.
தகவலின்பேரில் கவிதா, விஸ்வநாதன், விஜி ஆகியோரை நேற்று முன்தினம் காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். மூவருக்கும், காங்கயம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் தனது குழந்தையுடன், திருப்பூரில் உள்ள மாவட்டகுழந்தைகள் நலக்குழு முன் கவிதா நேற்று ஆஜரானார். மாவட்டஅதிகாரி பிரேமலதா தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அனுப்பர்பாளையத்தில் உள்ள மரியாலயா காப்பகத்தில் தாய், குழந்தையை 10 நாட்கள் தங்கவைக்க உத்தரவிடப்பட்டது.
இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த குழந்தையின் தந்தை முருகன், நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். அவருக்கு நேற்று காலை காங்கயம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எச்சரிக்கையுடன் ஜாமீன் வழங்கியது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago