ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர்அணையில் இருந்து நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 7,600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், ஆரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் உபரிநீரால், ஊத்துக்கோட்டையில் உள்ள தற்காலிக தரைப்பாலத்தின் பெரும்பகுதி நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், திருவள்ளூரிலிருந்து, ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திரப் பகுதிகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
பெரியபாளையம்- புதுப்பாளையம் தரைப்பாலமும் நீரில் மூழ்கியதால், நெல்வாய், எருக்குவாய் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பாதிப்படைந்துள்ளனர். கும்மிப்பூண்டி – பெருவாயலைச் சேர்ந்தராஜாமணி(18), நேற்று ஆரணி ஆற்று வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டதால், அவரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையின் உபரிநீரால், பள்ளிப்பட்டு, திருத்தணி வட்டங்களில்கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் நேற்று கே.கே.சத்திரம் அருகே என்.என்.கண்டிகை பகுதி தரைப்பாலம் மூழ்கியது.
ராணிப்பேட்டை மாவட்டம்,சோளிங்கர் ஏரியின் உபரிநீரால்,நேற்று முன்தினம் முதல் திருத்தணி பகுதியில் செல்லும் நந்தியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், திருத்தணி - பொதட்டூர்பேட்டை சாலையில், தெக்களூர் பகுதி தரைப்பாலம் மூழ்கியது. ஆறுகளின் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago