கிருஷ்ணகிரியில் நேற்று முன்தினம் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்தனர்.
`நிவர்' புயலால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணி வரை இடைவிடாமல் மிதமான மழை பொழிவு காணப்பட்டது. இந்த மழையால் நீர்நிலைகள் மற்றும் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. நேற்று வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாக இருந்தது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மழை யளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:
சூளகிரியில் 45, ஓசூர் 42, பெனுகொண்டாபுரம் 37.80, கிருஷ்ண கிரி 34.40, நெடுங்கல் 30.60, தளி 30, பாரூர் 28.80, தேன்கனிக்கோட்டை 28.60, போச்சம் பள்ளி 27.40, ஊத்தங்கரை 24.20, ராயக் கோட்டை 10, அஞ்செட்டி 4 மிமீ.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு விநாடிக்கு 328 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று விநாடிக்கு 488 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் 40.02 அடிக்கு தண்ணீர் உள்ளதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. கெலவரப்பள்ளி அணையில் 24 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 303 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 333 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து 215 கனஅடி தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 50 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 29.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. பாரூர் ஏரி நிரம்பி உள்ளதால், ஏரியில் இருந்து 28 கனஅடி தண்ணீர் இணைப்பு ஏரிகளுக்கு கால்வாய் மூலம் திறந்துவிடப்பட்டுள்ளது.
மாரண்டஅள்ளியில் கனமழை
தருமபுரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று முன் தினம் இரவு பரவலாக மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்ச அளவாக மாரண்ட அள்ளியில் 31 மி.மீ மழை பதிவாகியுள்ளது.இதுதவிர, பாலக்கோடு பகுதியில் 20.8 மி.மீ, பென்னாகரம் பகுதியில் 12 மி.மீ, பாப்பிரெட்டிப்பட்டியில் 11.1 மி.மீ, தருமபுரியில் 10 மி.மீ, அரூரில் 9 மி.மீ, ஒகேனக்கல்லில் 8 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago