அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி, தி.மலை அண்ணாமலை யார் கோயிலில் நேற்று அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 29-ம் தேதி (நாளை) அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. ஐயங்குளத்தில் பாரம்பரியமாக நடைபெற்ற தெப்பல் உற்சவம், அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரம்மத் தீர்த்தத்தில் ஆகம விதிப்படி, வரும் 30-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை நடைபெறும். இந்த நிகழ்ச்சிகள், கோயில் இணையதளம், அரசு கேபிள் டிவி, யூ டியூப், உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலமாக ஒளிபரப்பப்படும்.
தி.மலை மாவட்டத்துக்கு உள்ளே இயக்கப்படும் பேருந்து கள் வழக்கம்போல் இயக்கப்படும். சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது. மலை மீது ஏறவும், கிரிவலம் செல்ல அனுமதி இல்லை. வெளியூர்களில் இருந்து 28-ம் தேதி (இன்று) முதல் 30-ம் தேதி வரை என 3 நாட்களுக்கு தி.மலை நகருக்குள் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வர தடை விதிக்கப்படுகிறது. தி.மலை நகரில்கடைகள் வழக்கம்போல் இயங்கும். அத்தியாவசியப் பொருட்கள் தடை யின்றி கிடைக்கும். கோயில் உள்ளே நிகழ்ச்சிக்கு சம்பந்தப்பட்டவர்கள் தவிர யாருக்கும் அனுமதி இல்லை.
வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் தலைமையில் 2,700 காவல் துறை யினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நகரை இணைக்கும் 9 சாலை களும் காவல் துறையினர் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்படும். அன்னதானம் வழங்கவும் அனுமதி இல்லை” என்றார்.
அப்போது, தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago